அரசு பள்ளிகளில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு


அரசு பள்ளிகளில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு
x

திருக்கனூர் பகுதியில் உள்ள 3 அரசு பள்ளிகளில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழக்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ருசித்து பார்த்தார்.

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் உள்ள 3 அரசு பள்ளிகளில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழக்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ருசித்து பார்த்தார்.

கவர்னர் திடீர் ஆய்வு

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி, கொடாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூனிச்சம்பட்டு பள்ளியில் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றனர்.

இந்த ஆய்வின்போது பள்ளி வகுப்பறைகளுக்கு சென்ற கவர்னர் மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் பள்ளி வளாகத்தில் கட்டப்படும் கழிப்பிடத்தை பார்வையிட்டார்.

உணவை ருசித்து பார்த்தார்

இதன்பின் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து கவர்னர் ருசித்து பார்த்தார். மாணவர்களுக்கு அவர் உணவு பரிமாறினார். மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர், நான் யார் தெரியுமா? என கேள்வி எழுப்பினர். அப்போது மாணவர்கள் பலர், பலத்த சத்தத்துடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் என்று கூறினர்.

பள்ளியில் மதிய உணவுடன் வழங்கப்படும் காய்கறி களையும் சேர்த்து சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், நன்கு படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை கூறினார்.

வாரத்தில் 3 முட்டை

ஆய்வுக்கு பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், எனது முயற்சியால் 7 பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பள்ளிகளில் ஆய்வு செய்தேன். சாப்பாடு நன்றாக இருந்தது.

உணவுடன் கொண்டைக் கடலை, பட்டாணி ஆகியவற்றை சேர்க்க கூறினோம். அவை உணவில் சேர்க்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் முட்டைகள் விரைவில் வழங்கப்படும். திருக் கனூர் அரசுப்பள்ளி கட்டுமான பணி விரைவில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கல்வித்துறை முதன்மை அதிகாரி தனசெல்வம் நேரு, இணை அதிகாரி சிவகாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story