5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் மானிய தொகையை வழங்க வேண்டும்


5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் மானிய தொகையை வழங்க வேண்டும்
x

பட்ஜெட்டில் அறிவித்தபடி 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் மானிய தொகையை வழங்க வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் வலியுறுத்தினர்.

பட்ஜெட்டில் அறிவித்தபடி

காரைக்கால் மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் காரைக்கால் நகராட்சி வளாகத்தில் சங்க தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சங்க செயலாளர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுகளாலும், உள்ளாட்சித்துறை நிர்வாகத்தின் அலட்சிய போக்காலும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் வரி வருவாய்கள் மற்றும் அரசு வழங்கும் கொடைகள் முற்றிலுமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு 5 முதல் 6 மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாமலும், கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமலும் உள்ளது.

காரைக்கால் பகுதி 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். காரைக்கால் பகுதியில் அள்ளப்படும் மணல்களுக்கு உரிய ராயல்டி தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், சங்க துணைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story