டைல்ஸ் கடை உரியவரிடம் ஒப்படைப்பு

புதுவையில் கோர்ட்டு உத்தரவின்படி டைல்ஸ் கடை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவை பாரதி மில் எதிரே கண்ணம்மை தியேட்டர் இயங்கி வந்தது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த தியேட்டர் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளரான சித்தன்குடியை சேர்ந்த துரை, அரவிந்தர் வீதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவருக்கு டைல்ஸ் கடை வைக்க வாடகைக்கு கொடுத்தார்.
ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே வாடகை கொடுத்த சீத்தாராமன் தொடர்ந்து வாடகை தராமல் அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக துரை புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அந்த இடத்தை காலி செய்யுமாக சீத்தாராமனுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் அவர் அந்த இடத்தை காலிசெய்யாமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து துரை கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த முதன்மை உரிமையியல் நீதிபதி ராஜசேகர், கடையை காலி செய்து இடத்தை உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு அமினா அம்பி மற்றும் வருவாய்த்துறை, காவல்துறையினர் அங்கு சென்று டைல்ஸ் கடையை காலி செய்து இடத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.