'எனக்கு எதிரான போராட்டங்களால் கவலையில்லை'

‘எனக்கு எதிரான போராட்டங்களால் கவலையில்லை’ என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
'எனக்கு எதிரான போராட்டங்களால் கவலையில்லை' என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த செஞ்சிலுவை சங்க தினவிழாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டணத்தை குறைக்க...
புதுவையில் நடந்த சுகாதார திருவிழாவில் 4 ஆயிரம் பேர் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டனர். 2 பேருக்கு இதய நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 75 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். புதுவை அரசு ஆஸ்பத்திரிகள், ஜிப்மர் ஆகியன மக்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருகின்றன.
ஜிப்மரில் வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் என்று கூறினார்கள். அந்த கட்டண விவரங்களை பார்த்துவிட்டு அவற்றை குறைக்க வேண்டும் என்று நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதினேன். கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஜிப்மர் ஏழை மக்களை உறிஞ்சுகிறது என்பன போன்ற வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்.
போராட்ட களமாக...
கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் ஜிப்மருக்கு ரூ.900 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1,400 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தைத்தான் நான் வேண்டாம் என்று கூறினேன். ஜிப்மரின் செயல்பாடு குறித்து கேட்க எம்.பி.க்களுக்கு உரிமை இருக்கிறது. அதை அவர்கள் ஜிப்மர் இயக்குனரை சந்தித்து நேரடியாக கேட்கவேண்டும். ஜிப்மரில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்க இடமில்லை என்று பத்திரிகைகள் வாயிலாக நான் தெரிந்துகொண்டேன். அதைத்தொடர்ந்து நடந்த ஆய்வின் அடிப்படையில் இப்போது 500 பேர் தங்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆஸ்பத்திரியை போராட்ட களமாக மாற்றக்கூடாது. மக்களுக்கு இடையூறு ஏற்படும்படி நடக்கக் கூடாது.
கவலையில்லை
கொரோனா காலத்தில் ஜிப்மர் நிறைய சேவைகளை செய்துள்ளது. நான்கூட 3 மாதம் தூங்கினேனா? என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட ஐதராபாத் விமான சேவை மீண் டும் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் நான் பொதுமக்களுடன்தான் பயணிக்கிறேன். எனது பயணம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். நான் ஒருபோதும் தனி விமானத்தை பயன்படுத்தவில்லை. கொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை எடுத்து வந்தபோதுதான் தனி விமானத்தில் வந்தேன்.
நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் எனது மக்கள் சேவை தொடரும். ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் செய்யலாம். எனக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. எனக்கு பொதுமக்கள் குறித்து அக்கறை உள்ளது. ஜிப்மரில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்கு 1990 முதலே கட்டணம் உள்ளது. நான் ஜிப்மருக்காக வக்காலத்தும் வாங்கவில்லை. இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.