முதலீடு செய்ய உகந்த இடமாக புதுச்சேரி மாற்றப்படும்

முதலீடு செய்ய உகந்த இடமாக புதுச்சோி மாற்றப்படும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டத்தில் அரசு செயலாளர் அருண் கூறினார்.
புதுச்சேரி
முதலீடு செய்ய உகந்த இடமாக புதுச்சோி மாற்றப்படும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டத்தில் அரசு செயலாளர் அருண் கூறினார்.
திட்ட கூட்டம்
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட கூட்டம் தட்டாஞ்சாவடியில் உள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. புதுச்சேரி தொழில்துறை செயலாளர் அருண் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலீடு செய்வதற்கு உகந்த இடமாக புதுவையை மாற்றுவதற்கும், எளிதாக வணிகம் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர் வியாபாரத்தை சிறப்பாக செய்ய அனைத்து ஆதரவையும் புதுவை அரசு வழங்கும்.
தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொழில்முனைவோர் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக வாய்ப்புகள்
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை இயக்குனர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன் பேசுகையில், புதுவையில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை எட்டுவதற்கான வாய்ப்புகளை விளக்கியதுடன், புதுவையில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி, மருந்துகள், பொறியியல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ரசாயனங்கள் போன்றவற்றில் ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறினார்.
கூட்டத்தில் ஜி.ஏஸ்.டி. கூடுதல் ஆணையர் சஞ்சீவ் பட்நாகர், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள வர்த்தக வசதிகள், நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.
443 மில்லியன் அமெரிக்க டாலர்
புதுச்சேரியில் 2021-22ம் ஆண்டின் ஏற்றுமதி 443 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2019-20ம் நிதியாண்டுடன் ஓப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும். புதுவை மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருப்பினும் முதல் 10 பொருட்களே ஏற்றுமதியில் 90 சதவீதம் பங்களிக்கின்றன. ஏற்றுமதியை மேலும் அதிகப்படுத்துவதற்கான இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






