காட்டுக்குப்பம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு


காட்டுக்குப்பம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
x

பாகூர் காட்டுக்குப்பம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாகூர்

பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் மேற்கு பகுதி பாக்கியலட்சுமி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக பாக்கியலட்சுமி குடியிருப்போர் நல சங்கத்தினர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் காட்டுக்குப்பம் ஏரியை தூர்வார வேண்டும், மறு கரையை பலப்படுத்த வேண்டும், ஏரியின் போக்கு வாய்க்கால் குறுகியதாக இருப்பதால் வெள்ளநீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. ஆண்டுதோறும் இதே பிரச்சினை நீடிப்பதால், இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பாகூர் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் நடராஜன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பாக்கியலட்சுமி நகர் மற்றும் காட்டுக்குப்பம் ஏரியில் ஆய்வு செய்தார்.

அப்போது காட்டுக்குப்பம் ஏரி போக்கு வாய்க்காலை உடனடியாக சரி செய்யவும், ஏரியை தூர்வாரி மறுகரையை பலப்படுத்தவும் அதிகாரிகளிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முன்னாள் வார்டு உறுப்பினர் பார்த்திபன் மற்றும் பாக்கியலட்சுமி குடியிருப்போர் நல சங்கத்தினர் உடனிருந்தனர்.


Next Story