ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்


ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்
x

புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி போக்குவரத்துத்துறை சார்பில் ரூ.15¾ கோடியில் அதிநவீன வாகன தணிக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதிநவீன வாகன தணிக்கை

புதுவை போக்குவரத்துத்துறையின் கீழ் புதுச்சேரி, உழவர்கரை, வில்லியனூர், பாகூர் பகுதிகளில் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி, உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு இந்த தணிக்கை மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக ஊர்தி முனையத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற அலுவலகங்களுக்கு அந்தந்த பகுதிகளில் நடக்கிறது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் ஒரே இடத்தில் அதிநவீன முறையில் எந்திரங்கள் மூலம் வாகனங்களை தணிக்கை செய்ய தேங்காய்திட்டு பகுதியில் சிறப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.15 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

எந்திரங்கள் மூலம்

முதற்கட்டமாக நிர்வாக கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு வாகனங்கள் பரிசோதனை கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய போக்குவரத்து துறையின் இணை செயலாளர் சமீபத்தில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இங்கு வாகனங்களை தணிக்கை செய்யும் போது வாகனங்கள் நவீன எந்திரங்களின் முன்பு நிறுத்தப்படும். அந்த எந்திரம் வாகனத்தின் ஸ்டீரிங், பிரேக், வேகத்தின் அளவு, வண்டியின் அடிப்பகுதி, வாகனத்தின் உடல் பகுதி, புகையின் அளவு, உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

முதல் முறையாக

இதில் பரிசோதனை எந்திரம் வைக்கும் இடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. எந்திரங்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் 5, 6 மாதங்களில் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும். தென்னிந்தியாவில் முதல் முறையாக புதுவையில் தான் இந்த அதிநவீன வாகன தணிக்கை மையம் அமைப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story