ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
![ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/12/1502106-sucide4.webp)
விரும்பிய பெண்ணை மணக்க முடியாததால் ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி
விரும்பிய பெண்ணை மணக்க முடியாததால் ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஐ.டி. ஊழியர்
புதுவை திருமுடி சேதுராமன் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகன் தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் வீட்டில் இருந்த படியே வேலை செய்தார்.
இதற்காக வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்து தீபக், பணிகளை கவனித்து வந்தார். சாப்பிடுவதற்காக மட்டும் மாடியில் இருந்து இறங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தீபக்கிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து, பெண் பார்த்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபக் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்துவைக்கும்படியும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதற்கு பெற்றோர், தற்போது நேரம் சரியில்லை, கொஞ்சநாள் கழித்து பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றனர். அது முதல் தீபக் வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் சாப்பாட்டிற்காக தீபக் கீழே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர்.
தூக்கில் தொங்கினார்
ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டிப்பார்த்தும் திறக்கப்படாததால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தீபக் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், தீபக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.