புதுவையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது


புதுவையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது
x

புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் 103 டிகிரி வெயில் பதிவானது.

புதுச்சேரி

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் புதுவையில் 103 டிகிரி வெயில் பதிவானது.

103 டிகிரி வெயில்

புதுவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். வாகனங்களில் வெளியில் வருபவர்கள் முகத்தை துணியால் மூடியபடியும், தொப்பு அணிந்தபடியும் வலம் வருவதை காண முடிந்தது.

பகல் நேரத்தில் கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று 102.56 டிகிரி வெயில் பதிவானது. நேற்று மின்துறை பராமரிப்பு பணியின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

மக்கள் கூட்டம்

மாலையில் காற்று வாங்க மக்கள் கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை நோக்கி படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் அலை மோதியது. சிலர் கடல் நீரில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

கத்திரி வெயில் முடிந்தநிலையிலும் புதுவையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.


Next Story