ஜிப்மர் மருத்துவமனையின் சேவைகள் அரசியலாக்கப்படுகிறது


ஜிப்மர் மருத்துவமனையின் சேவைகள் அரசியலாக்கப்படுகிறது
x

ஜிப்மர் மருத்துவமனையின் சேவைகள் அரசியலாக்கப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனையின் சேவைகள் அரசியலாக்கப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

63 பரிசோதனைகள்

பொதுமக்களிடம் இருந்து பெற்ற சில தகவல்களின் அடிப்படையில் ஜிப்மர் நிர்வாகத்திடம் நான் கேட்டிருந்த விளக்கத்தை அடுத்து ஜிப்மரில் 63 வகையான புதிய பரிசோதனைகள் நடக்க இருக்கிறது. இவை எல்லாம் மிக உயர்ரக பரிசோதனைகள். புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மிகமிக அவசியமான பரிசோதனைகள். இவை இதற்கு முன்பு ஜிப்மரில் செய்யப்படாதவை. இதற்கு முன்பு இந்த பரிசோதனைகளுக்கு பெங்களூரு போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஜிப்மரில் செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் 63 பரிசோதனைகளுக்கும் ஏழைகளுக்கு கட்டணம் கிடையாது. வசதி படைத்தவர்களுக்கு மற்ற இடங்களில் ஆகும் செலவினைவிட பல மடங்கு குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஜிப்மர் நிர்வாகத்திடம் இருந்து பெற்றேன். சில பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து மத்திய சுகாதார மந்திரியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தேன்.

மிகக்குறைந்த கட்டணம்

அவர்களும் ஜிப்மரை தொடர்பு கொண்டார்கள். ஜிப்மர் நிர்வாகம் இந்த பரிசோதனைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியாக வேலை நடந்து வருகிறது. என என்னிடம் தெரிவித்தனர். அதேநேரத்தில் சி.டி.ஸ்கேன் போன்றவற்றுக்கு மிகக்குறைந்த கட்டணம் 1990-லிருந்து (உயர் வருமான பிரிவினருக்கு மட்டும்) வசூலிக்கப்படுகிறது. இது எதுவுமே புதியதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்று கூறினார்கள்.

நான் தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகத்திடம் தொடர்பில் இருப்பதால் எனது கருத்தை வலிமையாக தெரிவித்தேன். நிர்வாக ரீதியாகவும் நான் எழுப்பிய சந்தேகத்தின்பேரிலும் இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படாத ஒன்றுக்கு போராட்டம் நடத்துகிறார்கள் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இதுதொடர்பாக கூட்டம் நடத்த ஜிப்மர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தின் நோக்கம் அனைத்து விதமான சிகிச்சைகளும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை நிர்வாக ரீதியாக உறுதி செய்வதற்காகவே ஆகும்.

அரசியலாக்கப்படுகிறது

மத்திய சுகாதாரத்துறை மந்திரியின் ஆலோசனைக்கு பின் இது நடத்தப்படுகிறது. அவரும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்காணிப்பதற்கான அத்தனை உறுதிப்பாட்டினையும் தெரிவித்துள்ளார். அதேபோல் பொதுமக்களிடம் விளக்கம் அளியுங்கள் என்று ஜிப்மர் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 8-ந்தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய அறிக்கை கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது அல்ல. எந்த பரிசோதனையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை தெரிவிப்பதாகும். அதுவும் திடீர் அறிவிப்பு அல்ல. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவினை தெரிவித்துள்ளனர். மக்கள் நலனுக்காக நடத்தப்படும் மருத்துவமனையின் சேவைகள் அரசியலாக்கப்படுகிறது.

மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ உதவி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தொடர்ந்து மத்திய அரசிடமும் வலியுறுத்தியும் வருகிறேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story