ஜிப்மர் ஒப்பந்த பெண் ஊழியர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை


ஜிப்மர் ஒப்பந்த பெண் ஊழியர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை
x

வில்லியனூர் அருகே ஜிப்மர் ஒப்பந்த பெண் ஊழியர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே ஜிப்மர் ஒப்பந்த பெண் ஊழியர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடந்து சென்றவர்

வில்லியனூர் அருகே உள்ள அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிமூலம் மனைவி கோவிந்தம்மாள் (வயது 40). ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

ஜிப்மர் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு 10 மணியளவில் அரியூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு கோவிந்தம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள தனது மகனிடம் செல்போனில் பேசிக்கொண்டே வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

இரும்புக்கம்பியால் அடி

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் திடீரென கோவிந்தம்மாளின் பின்பக்க தலையில் இரும்புக்கம்பியால் தாக்கினர் இதில் பலத்த காயமடைந்ததில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் செல்போன் மூலமாக மகனுக்கு கேட்டுள்ளது. இதனால் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதை அறிந்த அவர் தனது அண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

அவரும் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து பார்த்தபோது கோவிந்தம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கோவிந்தம்மாளை கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் மறியல்

இந்தநிலையில் இன்று காலை கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தும் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தம்மாளின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

இந்த பயங்கர கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் குற்றவாளிகள் யார்?, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது கஞ்சா போதையில் கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story