216 பேருக்கு கலைமாமணி விருது


216 பேருக்கு கலைமாமணி விருது
x

கலை பண்பாட்டுத்துறை சார்பில் 216 பேருக்கு கலைமாமணி விருது நாளை (சனிக்கிழமை) வழங்கப்படுகிறது.

புதுச்சேரி

கலை பண்பாட்டுத்துறை சார்பில் 216 பேருக்கு கலைமாமணி விருது நாளை (சனிக்கிழமை) வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புறக்கலை ஆகிய துறைகள் சார்ந்த வல்லுனர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில், புதுவை கலைமாமணி விருதுகளுக்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புற கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் விவர குறிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்பின் 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை புதுவை கலைமாமணி விருது பெறுவதற்கு தகுதியானவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பட்டியல் வெளியீடு

அதன்படி இயல் பிரிவில் கலைமாமணி விருது 44 பேர், இசை பிரிவில் 38 பேர், நாடகப்பிரிவில் 40 பேர், நடனம் 21 பேர், ஓவியம் மற்றும் சிற்பம் பிரிவில் 35 பேருக்கும், நாட்டுப்புறக்கலை பிரிவில் 38 பேர் என ஒட்டுமொத்தமாக 216 பேருக்கு கலைமாமணி விருது பெறுகிறார்கள். புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்களின் பெயர் விவரம் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுவை கம்பன் கலையரங்கில் விருது வழங்கும் விழா நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு விருது பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022, 2023-ம் ஆண்டுக்களுக்கான கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 1.6.2023 முதல் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறையில் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பங்கள் அளித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.


Next Story