காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாபந்தல்கால் முகூர்த்தம்


காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாபந்தல்கால் முகூர்த்தம்
x

காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவையொட்டி, இன்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவையொட்டி, இன்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால் அம்மையார்

இறைவனின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவரின் வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது. மும்மதத்தை சேர்ந்தவர்களும் சகோதர ஒற்றுமையுடன் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா, வருகிற 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி ஒரு மாதம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இன்று பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.

கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மாங்கனி இறைப்பு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஜூலை 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வீட்டுமாடி, வாசல்களில் இருந்து மாங்கனிகளை வாரி இறைப்பார்கள்.

இந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை பேறு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளிக்கிறார்.

மாங்கனி திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story