மதுபான கடை, குடோனுக்கு 'சீல்' வைப்பு


மதுபான கடை, குடோனுக்கு சீல் வைப்பு
x

பெர்மிட்டில் போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட மதுபான கடை மற்றும் குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன் உரிமத்தையும் ரத்து செய்து கலால் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

புதுச்சேரி

பெர்மிட்டில் போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட மதுபான கடை மற்றும் குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டதுடன் உரிமத்தையும் ரத்து செய்து கலால் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

ரூ.10 லட்சம் வரி ஏய்ப்பு

பல்வேறு மாநிலங்களில் இருந்து 850-க்கும் மேற்பட்ட வகையான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு புதுவையில் விற்கப்படுகின்றன. இதற்கு கலால்துறை துணை ஆணையரின் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதற்கான கலால் வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இந்தநிலையில் அனுபமா என்ற பெயரிலான மதுபான கடை ஆந்திர மாநிலத்தில் இருந்து பீர் வகைகளை வாங்கி உள்ளது. அதற்காக கலால்துறை துணை ஆணையர் சுதாகரின் கையெழுத்தை போலியாக போட்டு பெர்மிட் தயாரித்துள்ளனர்.

இதேபோல் 2 முறை மதுபானங்களை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் ரூ.10 லட்சத்தையும் வரி ஏய்ப்பு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கடை, குடோனுக்கு 'சீல்'

கலால் துறையினரின் அதிரடி சோதனையில் இந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுக்கடை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து கலால்துறை துணை ஆணையர் சுதகார் அதிரடி நடவடிக்கை எடுத்தார். மடுகரையில் உள்ள அந்த கடைக்கும், வாணரப்பேட்டையில் உள்ள குடோனுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

இதேபோல் வேறு மதுக்கடைக்காரர்கள் யாரும் இதுபோல் மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில்,''விதி மீறலை கண்டறிய கலால்துறையில் ஒரு வலுவான முறை உள்ளது. கலால்துறையின் அனைத்து அனுமதிகளும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இதுபோன்று செயல்பட்டு அரசுக்கு யார் நஷ்டம் ஏற்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


Next Story