லாரி அலுவலகத்தில் இரும்பு பொருட்களை திருடியவர் கைது

திரு-பட்டினத்தில் லாரி அலுவலகத்தில் இரும்பு பொருட்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
திரு-பட்டினத்தில் லாரி அலுவலகத்தில் இரும்பு பொருட்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
இரும்பு பொருட்கள் திருட்டு
காரைக்காலை அடுத்த நிரவி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). இவர் திரு-பட்டினம் பைபாஸ் சாலையில் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார். அதே இடத்தில் பழைய லாரி பொருட்களுக்கான கட்டுமானம் மற்றும் இரும்பு பொருட்களை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று சுப்பிரமணியன், தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக சேலத்துக்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பினார். அப்போது லாரி அலுவலகத்தில் இருந்த இரும்பு பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கைது
பின்னர் அலுவலக வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதுபோல் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து திரு-பட்டினம் போலீசாரிடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் சுப்பிரமணியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது லாரி அலுவலகத்தில் திருடியது திரு-பட்டினத்தை அடுத்த வடகட்டளை கிராமத்தை சேர்ந்த இளவரசன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.