அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
தற்காப்பு கலை
செந்தில்குமார் (தி.மு.க.): பாகூர் தொகுதியில் உள்ள மணப்பட்டு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பாகூர் அரசு மேல்நிலைப்பள்ளியை புதுப்பித்து சீரமைத்து கொடுக்க வேண்டும். குருவிநத்தம் பாரதிதாசன் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டும். ரொட்டிப்பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.
நேரு (சுயே): புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பெருமளவில் படித்து வரும் வ.உ.சி. மேல்நிலைப்பள்ளி, கல்வே காலேஜ் மேல்நிலைப்பள்ளியை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை விரைவாக முடிக்க வேண்டும். அரசு அறிவித்த இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும்
சிறப்பு வகுப்புகள்
வைத்தியநாதன் (காங்): புதுவையில் தரமான கல்வி வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்புகள் நிறுவப்பட வேண்டும்.
பெத்துசெட்டி பேட்டில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகள் அமைத்து கொடுக்க வேண்டும். லாஸ்பேட்டையில் உள்ள புறக்காவல் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
ஏ.கே.டி. ஆறுமுகம் (என்.ஆர்.காங்):- புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறத்தை மாற்றி வழங்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
சம்பத் (தி.மு.க.): புதுச்சேரி மாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இதனை கொண்டு வரும் போது 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத சிரமப்படுவார்கள். எனவே இதனை படிப்படையாக கொண்டு வர வேண்டும்.






