தியாகிகள் பென்ஷன் ரூ.12 ஆயிரமாக உயர்வு


தியாகிகள் பென்ஷன் ரூ.12 ஆயிரமாக உயர்வு
x

புதுச்சேரி தியாகிகளுக்கு பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி தியாகிகளுக்கு பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தியாகிகள் கவுரவிப்பு

புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு கவுரவிப்பு மற்றும் தேநீர் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலை அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

மாநில அந்தஸ்து

நாடு சுதந்திரம் அடைந்து 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். அல்லும் பகலும் தியாகிகள் அயராது போராடியும், தங்களின் இன்னுயிரை கொடுத்தும் சுதந்திரத்தை பெற்று தந்தனர். நம் நாடு தியாகிகளின் விருப்பப்படி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து தலைசிறந்த நாடாக விளங்கி வருகிறது. நம் நாட்டின் வளர்ச்சியை பிற நாடுகள் உற்று நோக்கி கவனித்து வருகிறது. விரைவில் நாம் வளர்ந்த உலக நாடுகளில் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருப்போம்.

நமது மாநிலமும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கல்வி, மருத்துவத்தில் முதலிடத்தில் உள்ளோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை சிறந்த மாநிலமாக திகழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக புதுவை சட்டமன்ற உறுப்பினர்களுடன், பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ரூ.12 ஆயிரமாக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் 1,348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதம் தோறும் அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தியாகிகள் பென்ஷன் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், அரசு செயலாளர் பத்மா ஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் தியாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story