மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைவில் முழு அடைப்பு போராடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி
ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைவில் முழு அடைப்பு போராடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஊர்வலம்
புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதையொட்டி, இன்று பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர்கள் பெருமாள், முருகன், சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலைமறியல்
இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதி சந்திப்பை அடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை செல்லவிடாமல் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் அங்கேயே நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேருவீதி, காந்தி வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, தாசில்தார் குமரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் தலைமை செயலாளரை முக்கிய நிர்வாகிகள் மட்டும் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை சந்தித்து பேசினார்கள்.
அரசின் கொள்கை முடிவு
அப்போது ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு விரைவில் முடிவு எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக போராட்டத்தின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-
முழு அடைப்பு
ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கவேண்டும் என்பது புதுவை மாநில மக்களின் கோரிக்கை. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அவலநிலை இல்லை. புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக ரேஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி ரேஷன் கடைகளை திறப்பதாக உறுதியளித்தார். ஆனால் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் தந்த பணம் கூட இப்போது வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை.
அதன்படி 15 மாதத்துக்கு சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு ரூ.9 ஆயிரமும், மஞ்சள் கார்டுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 500 செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த பணம் எங்கே போனது? ரேஷனில் இலவச அரிசி வழங்கக்கோரி வரைவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தை வாழ்த்தி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பேசினார்.






