புதுச்சேரியில் ராணுவ தளவாட தொழிற்சாலை


புதுச்சேரியில் ராணுவ தளவாட தொழிற்சாலை
x

புதுச்சேரியில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க மத்திய மந்திரியிடம், அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மத்திய நிதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு கடந்த 2007-ம் ஆண்டிற்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். புதுச்சேரியை 15-வது மத்திய நிதி குழுவிலோ அல்லது அடுத்து வரும் 16-வது நிதி குழுவிலோ சேர்க்க வேண்டும். இதனால் மாநிலத்திற்கு கூடுதலாக சுமார் ரூ.1,500 கோடி மத்திய அரசின் நிதி கிடைக்கும்

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து சுமார் 60 மாதத்திற்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவை தொகைகளை வழங்கிடவும் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை முழுமையாக கைவிட வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு வேலை வாய்ப்பை பெருக்கவும், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பில்லாத ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை, மத்திய அரசின் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது மாநில இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story