அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக்கொடி ஏற்றினார்


அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக்கொடி ஏற்றினார்
x

காரைக்கால் கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

காரைக்கால்

காரைக்கால் கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தின விழா

77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் நடந்த விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர், போலீசார், தீயணைப்பு வீரர்கள், பள்ளி, கல்லூரி, என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பு, குடிமையியல் பாதுகாப்பு படையினரின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.

சட்டம்- ஒழுங்கு போலீஸ் முதலிடம்

தொடர்ந்து, சுதந்திர தின உரையாற்றிய அமைச்சர், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், துணை கலெக்டர்கள், ஜான்சன் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் காவல்துறை அணிவகுப்பில் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட நலவழித்துறை சார்பில், சிறந்த சேவைக்கான சான்றிதழ் டாக்டர் உமா மகேஸ்வரிராய், செவிலியர் பானுமதி, எல்.எச்.வி. ரோசலின், கிராமப்புற செவிலியர்கள் ரோசலின் மேரி, ஸ்டெல்லா ஜெயராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சுழற்கோப்பை

மேலும், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பில் அன்னை தெரசா அரசு பள்ளிக்கு முதலிடமும், தனியார் பள்ளிகளின் அணிவகுப்பில் நிர்மலா ராணி அரசு உதவி பெறும் பள்ளிக்கு முதல் பரிசும் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் முதலிடத்தை பெற்ற செருமாவிலங்கை அரசு தொடக்கப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது. கடலில் தத்தளித்த 2 பேரின் உயிரை காப்பாற்றிய சத்யசீலன் என்பவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த பள்ளிகளுக்கு கல்வித்துறையின் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடிநீர் இன்றி மாணவர்கள் தவிப்பு

சுதந்திர தின விழாவில் தியாகிகளுக்கு வழக்கமாக சீகல்ஸ் உள்ளே தட்டில் வைத்து உணவு வழங்கப்படும். ஆனால் நேற்று பார்சல் உணவு வழங்கப்பட்டது. அதில் காய்ந்துபோன சப்பாத்தி இருந்தது. வயது முதிர்ந்த தியாகிகள் பலர், அதை சாப்பிடாமல் கீழே வீசி விட்டு சென்றதை காண முடிந்தது. வெயில் கொளுத்திய நிலையில் குடிநீர் இன்றி விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தவித்தனர். விருதுபெற வந்த பலருக்கு இருக்கைகள் போடப்படாததால் அவர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து இருந்தனர்.


Next Story