கடற்கரை, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


புதுவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடற்கரை மற்றும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடற்கரை மற்றும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவையில் உள்ள குத்பா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன.

புதுவை கடற்கரை காந்திதிடலிலும் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்கள். தொழுகையில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் ஈடுபட்டனர்.

ஆரத்தழுவி வாழ்த்து

தொழுகைகள் முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகை ஈகைத்திருநாள் என்பதால் இஸ்லாமியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்திலிருந்து பள்ளிவாசல் தலைவர் அப்துல் பாரூக் தலைமையில் மவுன ஊர்வலம் நடை பெற்றது. முடிவில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறி கொண்டனர். இதில் ஏராளமான சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காரைக்கால்

காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல், கிதர்பள்ளி, மெய்தீன் பள்ளி வாசல் என மாவட்டத்தில் உள்ள 100-க்கணக்கான பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மேலும், தங்கள் வீட்டு உணவு பண்டங்களை பக்கத்து வீடு, நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.


Next Story