மணல் திருட்டால் பொலிவிழந்து வரும் நல்லம்பல் ஏரி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் சுற்றுலா கனவுடன் உருவாக்கப்பட்ட நல்லம்பல் ஏரி மணல் திருட்டால் பொலிவிழந்து வருகிறது.
கோட்டுச்சேரி
சுற்றுலா கனவுடன் உருவாக்கப்பட்ட நல்லம்பல் ஏரி மணல் திருட்டால் பொலிவிழந்து வருகிறது.
நல்லம்பல் ஏரி
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியில் மத்திய அரசின் உதவியுடன் கடந்த 2014-ம் ஆண்டு நல்லம்பல் ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் ஆரம்பத்தில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
பின்னர் ஏரியை சீரமைத்து, கரைகளை உயர்த்தி, ஏரியை சுற்றி சாலைகளை அமைத்து சுற்றுலா வளர்ச்சியை உள்ளடக்கியதாக புதுச்சேரி அரசு மாற்றியது. திருநள்ளாறு சனிஸ்வரர் கோவிலுக்கு வரும் வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.
சுற்றுலா மையமாக மாற்றம்
நல்லம்பல் ஏரிக்கு செல்லும் வழியில் பெயர்பலகை, சுற்றுலா மையமாக மாற்றப்பட்டதை குறிக்கும் அழகிய வளைவு, ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, வாகனங்கள் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டன.
ஏரியை சுற்றிலும் நிழல் தரும் மரங்கள், பல வண்ணப் பூச்செடிகள் நடப்பட்டன. நடைபாதையில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகளும் அமைக்கப்பட்டன. உள்ளூர் மக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள சிறந்ததாக இந்த ஏரி திகழ்ந்தது.
மணல் திருட்டு
விதி வசத்தால் இந்த ஏரி மணற்பாங்கான நிலப்பகுதியைக் கொண்டிருந்ததால் மணல் வியாபாரிகளுக்கு கற்பக தருவாக மாறியது. இரவு, பகலாக இந்த ஏரியிலிருந்து வாகனங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஏரி பகுதி பள்ளத்தாக்கு போல் காட்சியளிக்கிறன்றன. ஏரியில் மணல் திருடுவதற்காக மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன. பல கோடி ரூபாய் சுற்றுலா கனவுடன் உருவான நல்லம்பல் ஏரி மணல் கடத்தலால், அதன் பொலிவை இழந்து வருகிறது. நடைபாதைகளில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. கனரக வாகன நடமாட்டத்தால் சாலைகள் உருத்தெரியாமல் சிதைந்து போய் காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
வரம்பு மீறிய மணல் எடுப்பால் தனது பொலிவையும், பசுமையையும் இழந்து நிற்கும் நல்லம்பல் ஏரியின் சுற்றுலா நோக்கம் உயிர் பெறுமா?.






