பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்கள்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் அறிவுறுத்தினார்.
மாதூர்
பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் அறிவுறுத்தினார்.
பயிற்சி முகாம்
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு தோராயமாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பமானது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் நச்சு வாயுக்களான மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு மற்றும் இதர வாயுக்களினால் ஓசோன் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மரம் வெட்டுவதற்கு முன்பாக யோசிக்க வேண்டும். அப்படி வெட்டும் சூழ்நிலையில் ஒரு மரத்திற்கு ஈடாக 5 மரக்கன்றுகள் நட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்றுகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு) வள்ளியப்பன், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர் மாலா, வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் (உழவியல்) அரவிந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்று மரக்கன்றுகள் மற்றும் உரம் வழங்கப்பட்டன. முடிவில் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் கதிரவன் நன்றி கூறினார்.