காரைக்காலில் அடுத்த மாதம் 'கார்னிவெல்' விழா

7 ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் அடுத்த மாதம் கார்னிவெல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
7 ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் அடுத்த மாதம் கார்னிவெல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
7 ஆண்டுக்கு பின்...
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி சுற்றுலாத்துறையும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆண்டுதோறும் 'கார்னிவெல்' விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2015-ம் ஆண்டு காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் சந்திர பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் வல்லவன், அரசு செயலாளர்கள் நெடுஞ்செழியன், அருண் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் "காரைக்கால் கார்னிவெல்" விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டது.
கலைநிகழ்ச்சிகள்
வழக்கமாக கார்னிவெல் விழா 4 நாட்கள் நடத்தப்படும். ஆனால், தற்போது விழா நடத்துவது என திட்டமிடப்பட்டாலும், எத்தனை நாட்கள் நடத்துவது என்ற முடிவு இன்னமும் எடுக்கப்பட வில்லை.
கார்னிவெல் விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை ஏற்றம், மாரத்தான், நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாலையோர கலைநிகழ்ச்சி, திரையிசை கலைஞர்களின் இன்னிசை கச்சேரி மற்றும் உணவுத்திருவிழா என நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.






