முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் முறையீடு

கூட்டணி அரசு மீது பா.ஜ.க.வினர் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
புதுச்சேரி
கூட்டணி அரசு மீது பா.ஜ.க.வினர் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்து பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ. அங்காளன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோர் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரசார விவாதம்
அப்போது பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் விமர்சனங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினா். அவர்கள் பேசுவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
கூட்டத்தை தொடர்ந்து அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அரசு மீது பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பொதுவெளியில் விமர்சனம் செய்வது கூட்டணி தர்மத்தை மீறுவதாகும். இப்போது சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுத்தது யார்? சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்களும் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். சபாநாயகரே பழச்சாறு கொடுத்து முடித்து வைத்துள்ளார்.
ராஜினாமா செய்ய தயாரா?
இப்போது சபாநாயகர் ஊரில் இல்லை. அவர் வந்ததும் நாங்கள் நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்போம். இப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமியை விமர்சிப்பவர்கள் அவரது பெயரை சொல்லித்தான் வெற்றிபெற்றார்கள். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? எங்களால் ஓரளவுக்குத்தான் பொறுக்க முடியும்.
இவ்வாறு ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. கூறினார்.






