வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு


வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
x

திருபுவனையில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொருட்களை எடுத்து சென்ற லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனை

திருபுவனையில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொருட்களை எடுத்து சென்ற லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலகம்

வில்லியனூர் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் திருபுவனையில் செயல்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அலுவலகம் மூலம் திருபுவனை, வில்லியனூர் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாகனங்கள் பெயர் மாற்றம் பணிகளை செய்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த அலுவலகம் போதிய இடவசதி இல்லாததால் புதுச்சேரி சாரம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில் இன்று காலை திருபுவனை போக்குவரத்து கிளை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், டேபிள்கள், சேர்கள் உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் லாரியின் மூலம் ஏற்றி செல்ல முயன்றனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் போக்குவரத்து கிளை அலுவலகம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் பொருட்களை ஏற்றிய லாரியையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லாரியில் ஏற்றிய பொருட்களையும் கீழே இறக்கி வைத்து மீண்டும் அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story