சாலையில் அறுந்து கிடக்கும் கேபிள்களை அகற்றாவிட்டால் அபராதம்

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் அறுந்து கிடக்கும் கேபிள்களை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளான கோரிமேடு மெயின்ரோடு, காமராஜர் சாலை, ஏர்போர்ட் ரோடு, வழுதாவூர் ரோடு மற்றும் விழுப்புரம் மெயின்ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் கேபிள் வயர் மற்றும் வலைத்தொடர்பு நிறுவனங்களின் வயர்கள் சாலையின நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது தொங்கிக்கொண்டுள்ளன.
மேலும் பயன்பாட்டில் இல்லாத வயர்கள் நடுரோட்டில் அறுந்து கிடக்கின்றன. இது போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு, வலைத்தொடர்பு நிறுவன ஆபரேட்டர்கள் உடனடியாக அவற்றை சரிசெய்யவோ, அகற்றவோ அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் புதுவை நகராட்சிகளின் சட்டப்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தக்க அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.