மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி பொதுமக்கள் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி பொதுமக்கள் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
குறைந்த மின் அழுத்தம்
காமராஜ் நகர் தொகுதி கவிக்குயில் நகர் 4-வது குறுக்கு தெரு முதல் 9-வது குறுக்கு தெரு வரை சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தம், தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
இதனை சீரமைக்கக்கோரி பலமுறை மின்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் சிலரது நடவடிக்கையால் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களுடன் இன்று மின்துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் துரை.செல்வம், துணை செயலாளர் தயாளன், தொகுதி பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதிகாரி உறுதி
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மின்துறை தலைவர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






