பேரறிவாளன் விடுதலை வரலாற்று பிழை


பேரறிவாளன் விடுதலை வரலாற்று பிழை
x

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வரலாற்று பிழை என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வரலாற்று பிழை என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

துரதிர்ஷ்டமானது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து இருப்பது வேதனை அளிப்பதாகும். சிறையில் உள்ள இது போன்ற மற்ற குற்றவாளிகளுக்கு தராத சலுகையை அவருக்கு மட்டும் அளித்து இருப்பது துரதிர்ஷ்டமானது. இதை ராஜீவ்காந்தி கொலை வழக்காக மட்டும் பார்க்காமல் பொதுவாக பார்க்க வேண்டும்.

ஏனென்றால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளை அழிக்கக்கூடிய ஆயுதமாக இதனை பார்க்கலாம். வெளிநாடுகளில் இது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்தியாவிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதுதான் காங்கிரசின் எண்ணம். ஆனால் தற்போதைய நிகழ்வால் எதிர்காலத்தில் நம்முடைய பல தலைவர்களை நாம் இழக்கக் கூடிய ஆபத்துள்ளதாக கருதுகிறேன்.

வரலாற்று பிழை

இவர்களுக்கு அனுதாபம் காட்டுகின்றவர்கள் மனசாட்சியோடு இந்த நிலைபாடு சரியா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வேண்டுமானால் அவர்களை விடுதலை செய்திருக்கலாம். இதை ஒரு தீய சக்திகளுக்கு ஆதரவு தருகின்ற நிகழ்வாகவே பார்க்கின்றேன்.

எனவே, இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதே நேரத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் அனுதாபம் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் கொலையாளிக்கு அனுதாபம் தெரிவிப்பதை நாங்கள் மோசமான நிகழ்வாக பார்க்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிகழ்வை வரலாற்று பிழை என்று தான் சொல்லவேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாராயணசாமி கருத்து

பேரறிவாளன் விடுதலை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

இந்திய வெளியுறவு மற்றும் அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயல்பட்டவர், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. அவரின் மறைவு ஏற்க முடியாதது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளனை சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டனாகிய நான் என்றும் மன்னிக்கவே மாட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story