திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்காலில் தொடர் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால்
தொடர் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
சனீஸ்வரர் கோவில்
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள்.
இன்று சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை எதிரொலியாலும் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடிய அவர்கள் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
முகக்கவசம் கட்டாயம்
புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவ தொடங்கியதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
நளன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் பலர், அங்குள்ள உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை அதிகம் பயன்படுத்தினர். இதில் கழிவறையில் ரூ.5 கட்டணம் என இருக்கும் போது, சிலர் ரூ.10 வாங்கிக்கொண்டு ரசீதும் தராததால் பக்தர்கள் சிலர் ஊழியர்களுடன் வாக்குவாததில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






