காரைக்கால் கடலில் விஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்கள்

காரைக்கால் கடலில் விஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்கள் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துளனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் கடலில் விஷத்தன்மையுள்ள ஜெல்லி மீன்கள் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துளனர்.
ஜெல்லி மீன்கள்
காரைக்காலில் சிறந்த பொழுதுபோக்கு இடமாக கடற்கரை திகழ்கிறது. காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளில் உள்ள மும்மத தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க காரைக்கால் கடற்கரைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க காரைக்கால் கடலில் தற்போது சொறி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றி கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.
விழிப்புணர்வு பலகை
விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.
இதனால் தினமும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை என்ற போதிலும், இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






