போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை


போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை
x

தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரோந்து போலீசார்

புதுவை நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (வயது 35). திருநங்கையான இவர், நேற்று இரவு நோணாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு ரோந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் 3 பேர், வசந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன் அவரை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வசந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தெரியவந்ததும் சக திருநங்கைகள் இன்று காலை ஒன்றாக கூடினார்கள்.

இந்தநிலையில் திருநங்கை வசந்தியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ரோந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடற்கரை சாலையையொட்டி உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்க அவர்கள் அனுமதி கேட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் சுவாதிசிங், செல்வம், வீரவல்லவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சம்பந்தபட்ட அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தினார். அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறினால் தன்னிடம் வருமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story