புதுச்சேரியில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன


புதுச்சேரியில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன
x

புதுவையில் ஒரேநாளில் 11 செ.மீ. மழை பதிவானது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

புதுச்சேரி

புதுவையில் ஒரேநாளில் 11 செ.மீ. மழை பதிவானது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

கொட்டி தீர்த்த மழை

புதுவை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த வாரம் மழைபெய்தது. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பலத்த மழை பெய்தது.

புதுச்சேரியில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மழை நேற்று வரை கொட்டி தீர்த்தது. இதனால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

ரெயின்போநகர், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், லம்போர்ட் சரவணன் நகர், புஸ்சி வீதி, பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அபிசேகப்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த வீரப்பன் என்பவரது வீட்டின் பின் சுவர் இடிந்து விழுந்தது.

நகராட்சி பணியாளர்கள் தீவிரம்

வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் பகல் முழுவதும் லேசான வெயிலுடன் மழை இல்லாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டினர். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல் மழையினால் சேதமடைந்த சாலைகளில் ஜல்லி, மண்கொட்டி சீர்செய்யும் பணியும் நடந்தது. மழை இல்லாததால் புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் நகரை வலம் வந்தனர்.

காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

ஒரேநாளில் 11 செ.மீ. மழை பதிவு

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, நேற்று காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 மணிவரை 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக நகர பகுதியில் 17.8 பதிவாகி இருந்தது. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தேங்காய் திட்டு, வீராம்பட்டினம், பொம்மையார் பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் கொண்டு செல்லப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

ஏற்கனவே பெய்த மழையின்போது பாகூர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. தற்போது பெய்த மழையால் மற்ற ஏரிகளும் நிரம்பின. நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையும் நிரம்பி வழிகிறது.

1 More update

Next Story