பேரீச்சை, ஏலக்காய், மிளகு பயிரிட்டு கைதிகள் சாதனை


பேரீச்சை, ஏலக்காய், மிளகு பயிரிட்டு கைதிகள் சாதனை
x

காலாப்பட்டு சிறையில் பேரீச்சை, ஏலக்காய், மிளகு பயிரிட்டு கைதிகள் சாதனை படைத்துள்ளனர். இதை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

காலாப்பட்டு

காலாப்பட்டு சிறையில் பேரீச்சை, ஏலக்காய், மிளகு பயிரிட்டு கைதிகள் சாதனை படைத்துள்ளனர். இதை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

கைதிகளுக்கு பயிற்சி

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மன அழுத்தத்தை போக்கவும், தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும் போது சுயதொழில் செய்து குடும்பத்தை நடத்தும் வகையிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர்மண்டிக் கிடந்த இடத்தை உழுது பழச்செடிகள், மூலிகை செடிகள் உள்ளிட்டவற்றை நட்டு கைதிகள் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினர். இதனை தொடர்ந்து ஆடு, மாடு, கோழி, முயல் போன்றவற்றையும் வளர்த்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் இந்த விவசாயம் விரிவடைந்து கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய், பீன்ஸ், கருணை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் வாழை, பப்பாளி போன்றவை பயிரிடப்பட்டன.

பேரீச்சை, ஏலக்காய் பயிர்

தற்போது பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் விளையும் பேரீச்சை, மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கைதிகள் இயற்கை முறையில் பயிரிட்டுள்ளனர். சிறை கைதிகளின் உழைப்பில் நடந்த இந்த சாதனை பற்றி புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் நேற்று மாலை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு கைதிகள் பயிரிட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்டு கைதிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் கைதிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை வழங்கி மரக்கன்றுகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நட்டார்.

ஆய்வின்போது தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், சிறைத்துறை ஐ.ஜி.ரவிதீப்சிங் சாகர், சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர், வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story