திரு-பட்டினத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்

காரைக்காலில் கோவில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி திரு-பட்டினத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
காரைக்கால்
கோவில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி திரு-பட்டினத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. குறித்து அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் பிரசித்தி பெற்ற வீழிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஏப்ரல் மாதம் பாலஸ்தாபனம் நடத்த கோவில் தனி அதிகாரி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது பற்றி உபயதாரர்கள், பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பாலஸ்தாபனம் நடத்தக்கோரி கோவில் உபயதாரர்கள், பொதுமக்கள் கோவில் எதிரே இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, கோவில் உபயதாரரும், என்.ஆர்.காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினருமான பாலகுரு தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
எம்.எல்.ஏ. குறித்து அவதூறு பேச்சு
போராட்டத்தில் பேசிய இந்து முன்னணி பிரமுகர் ஒருவர், தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நாகதியாகராஜன் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சிலர், திரு-பட்டினம் போலீசில் புகார் அளித்து, உண்ணாவிரதம் மற்றும் எம்.எல்.ஏ. குறித்த அவதூறு பேச்சை தடை செய்யவேண்டும் என்றனர்.
இதையடுத்து அவதூறாக பேசிய இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து உண்ணாவிரதம் மதியம் 2 மணியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கோவில் தனி அதிகாரி புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி விரைவில் கமிட்டி அமைத்து பாலஸ்தாபன தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.