2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
x

வில்லியனூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் பட்டாணிக்கலம் பகுதியில் ரெயில்வே கேட் அருகே புதிதாக மதுபான கடை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.

இந்தநிலையில் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் மதுபான கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடை அருகே திரண்டு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை அடித்து இழுத்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கிருந்த மற்றவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார்- பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சிலர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் தரத்தரவென இழுத்துச்சென்று அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு நான் விடமாட்டேன் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மதுக்கடை திறப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.


Next Story