புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது


புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது
x

தொடரும் மின்வெட்டால் புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. தீப்பந்தம், டயர்களை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

தொடரும் மின்வெட்டால் புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. தீப்பந்தம், டயர்களை கொளுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருளில் மூழ்கிய பஜார்

மின் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புதுவையில் மின்வெட்டு தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும், மருத்துவமனைகளில் நோயாளிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சுமார் மாலை 5.30 மணி அளவில் நகர், கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இரவு வெகுநேரமாகியும் மின் வினியோகம் சீராகவில்லை.

இதனால் பஜார் பகுதியான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, புஸ்சி வீதி மற்றும் பஸ் நிலையம், முத்தியால் பேட்டை, வெங்கட்டாநகர், முதலியார்பேட்டை, ஒயிட் டவுன், கடற்கரை சாலை, உப்பளம் ஆகிய பகுதிகளும், கிராமங்களும் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

தட்டுத்தடுமாறிய வாகனங்கள்

நகர் பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகளில் ஜெனரேட்டர்கள் மூலம் தங்களுக்கு தேயைான மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தினர்.

வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்த நிலையில் அவர்களும் மின்தடையால் அவதிக்குள்ளானார்கள். சுற்றுலா தலங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி கிடந்தன.

நேற்று மாலை நகர் பகுதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இருட்டாக இருந்ததால் தட்டுத் தடுமாறி இந்த வாகனங்கள் சென்றன.

ஒரு இடத்தை கடந்து செல்ல அரை மணி நேரத்துக்கு மேலானது. இதனால் நகர பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீப்பந்தம் கொளுத்தி போராட்டம்

இதற்கிடையே கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் பொதுமக்களுடன் முற்றுகையிட்டு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

லாஸ்பேட்டையில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ராஜா தியேட்டர் சந்திப்பு, நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜ் நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடந்தன.

கொக்குபார்க் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேதுசெல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது சைக்கிள் டயர்கள், மரக்கட்டைகளை தீயிட்டு கொளுத்தி அரசுக்கு எதிராகவும், மின்துறை ஊழியர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரில் பொதுமக்கள் வழுதாவூர் சாலையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த மாணவர்கள்

திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று நள்ளிரவு முதல் மின்தடை ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதனால் இன்று இரவு திருக்கனூர் கடைவீதி, கொடாத்தூர், சோரப்பட்டு, வாதானூர், விநாயகம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணவெளி தொகுதியிலும் இன்று மாலை மின்சாரம் தடைபட்டது. அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளுடன் 300-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், தீப்பந்தம் கொளுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் பாடம் படித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இரவு 9 மணிக்கு மேல் சீரானது

திருபுவனை பகுதியில் மின்தடை காரணமாக திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, திருபுவனை ஆகிய பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பாகூர் முள்ளோடை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பாகூர் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் நகர் மற்றும் கிராமப்புறங்களில் நடந்த இந்த திடீர் போராட்டங்களால் அந்தந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகம் செய்யப்பட்டதால் சகஜ நிலைக்கு திரும்பியது.

இரவிலும் சீராகவில்லை

ஆனால் வேறு சில இடங்களில் இரவு 11 மணிக்கு பிறகும் மின் வினியோகம் சீராகாமல் இருந்தது. கிருமாம்பாக்கம், புதுநகர், கன்னியகோவில், முள்ளோடை பகுதிகளில் மின்வெட்டு தொடர்ந்ததால் இருசக்கர வாகனங்கள் கூட நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகள் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அங்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் ஆகியோர் வந்து மின்வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் இரவு 11 மணிக்கு பிறகும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.


Next Story