கோர்ட்டு உத்தரவின்பேரில் கடைகள் மீட்பு

புதுவையில் 13 ஆண்டுகளாக வாடகை தராமல் கொடுத்தாவரிடமிருந்து, கோர்ட்டு உத்தரவின்பேரில் கடைகளை மீட்கப்பட்டது.
புதுச்சேரி
புதுவை சுய்ப்ரேன் வீதியை சேர்ந்தவர் விக்டர் ஜெகநாதன். இவர் செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள தனக்கு சொந்தமான 4 கடைகளை ரெயின்போ நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ஆனந்தன் கடந்த 2010-ம் ஆண்டு முதல் வாடகை ஏதும் கொடுக்கவில்லையாம். இதனால் கடையை காலி செய்யுமாறு கூறியும், அவர் காலி செய்யவில்லை. வாடகையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக விக்டர் ஜெகநாதன் புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி, கடையை காலி செய்ய உத்தரவிட்டார். இதனிடையே ஆனந்தன் அந்த கடைகளை வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதில் துணிக்கடை மற்றும் துரித உணவகம் உள்ளது.
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்படி கடைகளை காலிசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி விக்டர் ஜெகநாதன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி ராஜசேகர், கடையை காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அமீனா அம்பி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டது. பின்னர் அந்த கடைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.