ஜிப்மர் டாக்டரிடம் ரூ.2½ லட்சம் ஆன்லைன் மோசடி

புதுவை ஜிப்மர் டாக்டரிடம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது.
புதுச்சேரி
புதுவை ஜிப்மர் டாக்டரிடம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது.
ஜிப்மர் டாக்டர்
புதுவை புதுசாரம் விநாயக முருகன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் ஜெயின். இவரது மகன் அரிகந்த் ஜெயின் (வயது 24). இவர் ஜிப்மரில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் குறுஞ்செய்தி அனுப்பியவரின் பெயர் லட்சுமி ஷிரின் என்றும் டைம்ஸ் ஜாப் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் என்றும் கூறப்பட்டு இருந்தது.
டெபாசிட்டுக்கு போனஸ்
தங்கள் நிறுவனத்தின் சார்பில் பகுதிநேர வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதற்காக குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால் அதற்கு போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல்கட்டமாக அரிகந்த் ஜெயின் ரூ.1,002 டெபாசிட் செய்துள்ளார். அதற்காக போனஸ் தொகையுடன் சேர்த்து ரூ.1,402 அவரது ஆன்லைன் அக்கவுண்டில் வழங்கப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாக தொகைகளை உயர்த்தி அரிகந்த் ஜெயின் டெபாசிட் செய்ய அதற்கான போனஸ் தொகையும் ஆன்லைனில் வழங்கப்பட்டது.
ரூ.2.59 லட்சம் மோசடி
இதேபோல் தொடர்ச்சியாக ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 742-ஐ அரிகந்த் ஜெயின் டெபாசிட் செய்தார். இதை அவர் எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதை எடுக்க வேண்டுமாயின் மேலும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னரே அரிகந்த் ஜெயினுக்கு தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசிலும், கோரிமேடு போலீசிலும் புகார் செய்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.