ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி

புதுவையில் குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக ஜிப்மர் ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறைந்த விலையில் வீட்டுமனை
புதுச்சேரி தமிழ்செல்வி நகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது 34). ஜிப்மரில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மாகி பிராந்தியத்தை சேர்ந்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் சனில்குமார் (41), அவரது சகோதரர் சுகேஷ் (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் சனில்குமார் உள்பட 2 பேரும் சேர்ந்து புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி அருகே குறைந்த விலைக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்வதாக கூறினர்.
17 பேரிடம்...
இதனை நம்பிய அனுமோல் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஊழியர்கள் என 17 பேர் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மொத்தம் ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்துள்ளனர். ஆனால் சனில்குமார் கூறியதுபோல், வீட்டுமனைகளை வாங்கி கொடுக்கவில்லை. எனவே அவர்கள் அனைவரும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் சனில்குமார் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அனுமோல் உள்பட 17 பேர் இது தொடர்பாக கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் சனில்குமார், சுகேஷ் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.