பள்ளி, கல்லூரி வாகனங்களை 2 மாதத்திற்குஒரு முறை ஆய்வு செய்யவேண்டும்

காரைக்காலில் பள்ளி, கல்லூரி வாகனங்களை 2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்கால்
காரைக்காலில் பள்ளி, கல்லூரி வாகனங்களை 2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள்
காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்தில், வட்டார போக்குவரத்துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் மாவட்ட வட்டார போக்குவரத்துறை சார்பில், நேற்று பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி வட்டார போக்குவரத்துறை அலுவலகத்தில் நடந்தது.
அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்து கொண்டு பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார், மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன், வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், மாவட்ட போக்குவரத்து அதிகாரி கல்விமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு
இதைத்தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி வாகனங்கள் மாணவர்கள் பயணிக்க பாதுகாப்பாக உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற வாகனங்கள் ஆய்வு அடிக்கடி நடைபெற வேண்டும்.
குறிப்பாக போக்குவரத்துத்துறை மூலம் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை இது போன்று திடீர் ஆய்வு அவசியம் நடத்தப்பட வேண்டும். தனியார் பஸ்களில் மாணவர்கள் அதிகம் பயணிப்பதால், தனியார் பஸ்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பயணிக்கும் வாகனம் என்பதால் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும் வாகனத்துக்கு உட்பட்ட அனைத்து ஆவணங்களும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலுதவி பெட்டி
மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் வாகன டிரைவர்களிடம் கூறுகையில் 'மற்ற வாகனங்களை விட, பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்கும் போது, மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். எக்காரணம் கொண்டும், மது அருந்தியோ, செல்போன் பேசிக்கொண்டே, அதிவேகமாகவோ வாகனங்களை இயக்கக்கூடாது. அனைத்து வாகனத்திலும் முதலுதவிபெட்டி, தீயணைப்பு கருவி, அவசியம் இருக்கவேண்டும். இவற்றை கையாளும் முறைகளை டிரைவர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
மாணவர்கள் அமரும் இருக்கை, கைப்பிடி, படிகளை சரியாக உள்ளதா? என அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும்' என்றார். இன்று ஒரே நாளில் 120 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.