2 பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு 'சீல்'

புதுவையில் தடையை மீறி உற்பத்தி செய்த 2 பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வில்லியனூர்
புதுச்சேரி அரசு 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடை விதிக்கப்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறதா? என்பதை புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாசுகட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிள்ளையார்குப்பம், சுல்தான்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 நிறுவனங்களில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களையும் பூட்டி சீல் வைத்தனர். இந்த ஆய்வின்போது அறிவியல் ஆய்வாளர் விமல்ராஜ், அலுவலர்கள் முருகவேல், முருகசாமி, கர்ணம் ஆகியோர் உடனிருந்தனர்.