காரைக்கால்- இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து

காரைக்கால்- இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
காரைக்கால்
காரைக்கால்- இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
சாலை சீரமைப்பு
காரைக்கால் நகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளை பொதுப்பணித்துறை சார்பில், நபார்டு நிதியுதவியுடன் ரூ.22.40 கோடி செலவில் சீரமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மீன்வளம், சுற்றுலா, பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்களுக்கு பாதிப்பா?
காரைக்கால் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மார்ச் மாதத்துக்குள், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 100 சதவீதம் செலவு செய்யப்பட்டு விடும்.
வருகிற பட்ஜெட்டில் காரைக்கால் பகுதிக்கு புதிய திட்டங்கள் நிச்சயம் அறிவிக்கப்படும். நாகூர் பகுதியில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் காரைக்கால் கடல் பகுதியில் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் மீனவர்களுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கப்பல் போக்குவரத்து
காரைக்கால் மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, காரைக்கால் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் பணியும், முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கும். குறிப்பாக காரைக்கால்- இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை என்பதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சிவா, நாக.தியாகராஜன், கலெக்டர் முகமது மன்சூர், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, காரைக்கால் கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






