குப்பையில் பிடித்த தீயால் புகைமூட்டம்; வாகன ஓட்டிகள் திணறல்


குப்பையில் பிடித்த தீயால் புகைமூட்டம்; வாகன ஓட்டிகள் திணறல்
x

பிள்ளைத் தெருவாசலில் குப்பையில் பிடித்த தீயால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் திணறினார்கள்.

கோட்டுச்சேரி

பிள்ளைத் தெருவாசலில் குப்பையில் பிடித்த தீயால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் திணறினார்கள்.

மருத்துவ கழிவுகள்

காரைக்கால்-கும்பகோணம் மார்க்கத்தில் பிள்ளைத்தெருவாசலில் மின்பகிர்வு நிலையம் உள்ளது. இந்நிலையத்துக்கு அருகே வாஞ்சியாற்றங்கரைஅருகே வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இறைச்சிக் கடைகள், தனியார் மருத்துவமனைகள் அங்கு கழிவுகளைக் கொட்டி வருகின்றன.

பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது வாஞ்சியாற்றின் ஓரமாக புதர்களை அகற்றி, மேடு பள்ளங்களை சரி செய்து வைக்கின்றனர். இது குப்பைகள் கொட்டும் வண்டிகளுக்கு வசதியாகி உள்ளது. இது தவிர குப்பைகளை அள்ளிவரும் வண்டிகளும் அங்கு குப்பைகளை கொட்டிச் செல்கின்றன.

தீப்பிடித்து புகை மண்டலம்

இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியும், குப்பைகள் காற்றில் பறந்தும் வாகன ஓட்டிகளை சங்கடத்துக்கு உட்படுத்துகின்றன. இந்நிலையில் அங்கு கொட்டப்பட்ட குப்பையில் இன்று அதிகாலை தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயில் மருந்துகழிவு, இறைச்சிக்கழிவு எரிந்து துர்வாடையை உருவாக்கின. தீப்பொறிகள் காற்றில் பறந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் பெரும் சிரமப்பட்டனர்.

மேலும் அருகிலிருந்த கருவேல காடும் தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் சுமார் இரண்டு மணிநேரத்துக்கு அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே கடக்க வேண்டிய வாகனங்கள் ஜிப்மர் மருத்துவமனை அருகிலுள்ள மாற்று வழியைப் பயன்படுத்தி சென்றது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.


Next Story