தெருநாய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்

புதுச்சேரி
புதுவை மாநிலத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
கருத்தரங்கு
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் வெறிநாய்க்கடி நோய் ஒழிப்புக்கான மாநில செயல்திட்ட மேம்பாட்டு 2 நாள் கருத்தரங்கு அக்கார்டு ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ரேபிஸ் நோய்
வெறிநாய் கடியால் பரவும் ரேபிஸ் நோய் வந்தால் 100 சதவீதம் இறப்பு நிச்சயம். ரேபிஸ் வைரஸ் உடலின் உள்ளே புகுந்து நரம்பு மண்டலம், மூளையை தாக்கி உயிரை பறிக்கிறது. 2030-க்குள் ரேபிஸ் இல்லாத உலகு என்ற இலக்குடன் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே சிக்கிம், கோவாவை போல புதுச்சேரியும் ரேபிஸ் நோய் இல்லாத மாநிலமாக விரைவில் மாறும். சமுதாயத்தில் உள்ள எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
பெண்களுக்கு இதில் அதிகம் பங்கு உண்டு. ஏனென்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நாய் கடித்தால் அதற்கான சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொற்று உள்ள நாய்களின் எச்சில் பட்டால்கூட குழந்தைகளுக்கு ரேபிஸ் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இலவச தொலைபேசி எண்
புதுச்சேரியில் உள்ள தெரு நாய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நாய்களுக்கான காப்பகம் வைத்து அவற்றுக்கு உணவளிக்கலாம். வெறிநாய்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த இலவச தனி தொலைபேசி எண்ணை சுகாதாரத்துறை உருவாக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் வெறிநாய்க்கடி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி
கருத்தரங்கில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
உலக அளவில் ஆண்டுக்கு 59 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 20 ஆயிரம் பேர் இறக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒருவர் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நாம் வீட்டில் நாய், பூனையை செல்ல பிராணிகளாக வளர்க்கிறோம். அவற்றிக்கு தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்தாலோ அல்லது நகத்தால் நமது உடலில் கிழித்தாலோ உடனே ஊசி போட வேண்டும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
நாய்களுக்கு கருத்தடை
புதுவையில் உள்ள அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெறிநாய் கடி தடுப்பூசி எப்போதும் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் நாய்களுக்கு போடும் தடுப்பூசியும் கால்நடை நலத்துறையில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 70 ஆயிரம் தெருநாய்கள் உள்ளது. அதற்கு கருத்தடை செய்யவும், தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.