பெற்றோருடன் மாணவர்கள் திடீர் சாலைமறியல்


பெற்றோருடன் மாணவர்கள்   திடீர் சாலைமறியல்
x

திருக்கனூர் அருகே மாற்றுச்சான்றிதழில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோருடன் மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே மாற்றுச்சான்றிதழில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோருடன் மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாற்றுச்சான்றிதழ்

திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்காக மாற்றுச்சான்றிதழ் கேட்டு உள்ளனர்.

ஆனால் கல்வி கட்டண பாக்கியால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை பள்ளி நிவாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து, அவர், கல்வித்துறை இயக்குனரிடம் பேசி, மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

திடீர் சாலைமறியல்

இந்த நிலையில் இன்று அந்த மாணவர்களை அழைத்த பள்ளி நிர்வாகம், மாற்றுச்சான்றிதழில், பள்ளி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற இடத்தில் ஆம் என்று இருந்ததை இல்லை என்று திருத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்கனவே இருந்தது போலவே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறி பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story