போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

புதுவையில் செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பணிஇடைநீக்கம் செய்து டி.ஜி.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.

புதுச்சேரி

புதுவையில் செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பணிஇடைநீக்கம் செய்து டி.ஜி.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர்

புதுவை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அனில்குமார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த காவலர் உடல்தகுதி தேர்வின்போது பணியில் இருந்தார். அப்போது, அங்கு கொரோனா பரிசோதனைக்கான பணியில் இருந்த கணவரை பிரிந்தவரான செவிலியர் சிவசங்கரி (வயது 31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அனில்குமாரின் தோழியான ரெட்டியார்பாளையம் சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்த வித்யா எதிர்ப்பு தெரிவித்து சிவசங்கரியிடம் தகராறு செய்தார். மேலும் அனில்குமாருடன் பழக கூடாது என வித்யா எச்சரித்ததுடன், அவர் வேலை செய்யும் இடத்திலும், உறவினர்கள் வீட்டிற்கும் சென்று தவறாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வித்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணிஇடைநீக்கம்

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி சிவசங்கரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக ஸ்கூட்டரில் வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அனில்குமார், வித்யா ஆகியோர் சிவசங்கரியை வழிமறித்து திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் சிவசங்கரி புகார் செய்தார். அதன்பேரில் வித்யா, இன்ஸ்பெக்டர் அனில்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அனில்குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் அதிரடியாக உத்தரவிட்டார்.


Next Story