சுதேசி தர்ஷன் திட்ட வரைவு அறிக்கை 2 வாரத்தில் தயாராகும்

சுதேசி தர்ஷன் 2.0 திட்ட வரைவு அறிக்கை 2 வாரத்தில் தயாராகிவிடும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
புதுச்சேரி
சுதேசி தர்ஷன் 2.0 திட்ட வரைவு அறிக்கை 2 வாரத்தில் தயாராகிவிடும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
மத்திய மந்திரி ஆய்வு
மத்திய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் சுதேசி தர்ஷன் 1.0 மற்றும் சுதேசி தர்ஷன் 2.0 ஆகிய திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டி இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் மணிகண்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்போது புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களை அமைச்சர் லட்சுமிநாராயணன் எடுத்து கூறினார். சுதேசி தர்ஷன் 1.0 திட்டத்தில் புதுவைக்கு ரூ.133.31 கோடி வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவற்றில் புதுச்சேரியில் 20 பணிகள் கடற்கரை சுற்றுலா மேம்பாடு ரூ.58.44 கோடிக்கும், 7 பணிகள் பாரம்பரிய சுற்றுலா இடங்களில் மேம்பாடு ரூ.43.93 கோடிக்கும், 8 பணிகள் ஆன்மிக சுற்றுலா இடங்களின் மேம்பாடு ரூ.30.94 கோடிக்கும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
2 வாரத்தில் வரைவு அறிக்கை
அடுத்ததாக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தில் ரூ.150 கோடி அளவிற்கு நிதியுதவியை பெற லார்சன் டூப்ரோ என்ற தனியார் நிறுவனம் மூலம் மாஸ்டர் பிளான் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல் வரைவு அறிக்கையை 2 வாரத்தில் அளிக்க உள்ளதாகவும், அறிக்கை பெறப்பட்டவுடன் மத்திய சுற்றுலா அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பிரசாத் திட்டத்தின்கீழ் ஆன்மிக தள மேம்பாட்டிற்கான திட்ட வரைவு அறிக்கையை தாராஷா என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.110 கோடி நிதியை அளிக்க உள்ளது. அதன் தற்போதைய வளர்ச்சி நிலை குறித்தும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.






