கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கோட்டுச்சேரி மற்றும் திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்ற வாலிபா்களை போலீசாா் கைது செய்தனா்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டுச்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் காரைக்கால் நேருநகரை சேர்ந்த அமர்நாத் (வயது 22) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் எடை கொண்ட 12 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் திருவண்டார்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி, கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 136 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






