டெம்போ டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

புதுச்சேரி
அடிக்காசு கூடுதலாக வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து டெம்போ டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிக்காசு
புதுவை பஸ் நிலைய பகுதியில் டெம்போக்களை நிறுத்தி இயக்க கடந்த காலங்களில் ரூ.10 அடிக்காசு வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது புதிதாக அடிக்காசு ஏலம் விடப்பட்டுள்ளது. தற்போது ஏலம் எடுத்தவர்கள் ரூ.20 அடிக்காசு வசூலித்ததற்கு டெம்போ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி பஸ்நிலைய பகுதியில் டெம்போக்களை நிறுத்த போதிய இடவசதியில்லை, டிரைவர்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் புதுவை நகராட்சிக்கும் கடிதம் கொடுத்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம்
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டெம்போ டிரைவர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் டெம்போக்களை இயக்கவில்லை. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் யாரும் வரவில்லை. இதனிடையே சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்ட பெரும்பாலான டெம்போ டிரைவர்கள் வழக்கம்போல் தங்களது டெம்போக்களை இயக்க தொடங்கினர்.